Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

மே தினம்: தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் வித்யாசாகர்ராவ்:  உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு, சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவற்றை முன்பைவிட மேம்படுத்துவோம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது  உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக கைகோர்த்து போராடுவதிலும் திமுக என்றைக்கும் முன்னணியில் நின்று இருக்கிறது. புதிய தொழிலாளர் சட்டம், உலகமயமாக்கல் என்று எந்த காலகட்டத்திலும் தொழிலாளர்களுக்கு பிரச்னைகள் எழும் போது இனிமேலும் முதல் படைத் தளபதியாக நின்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காக திமுகபோராடும் என்பதை இந்த மே தினத்தன்று தெரிவித்து, எனது சார்பிலும், தலைவர் கருணாநிதி சார்பிலும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புனிதப் பாதையில் தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்த மக்கள், தங்களது வாழ்வில் அனைத்து வளங்களையும், நலங்களையும் பெற்று வாழ வேண்டும்.

விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வாழ்த்துகிறேன். திருநாவுக்கரசர்(தமிழக காங்கிரஸ் தலைவர்): இந்திய நாட்டின்  முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு  மகத்தானது.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்  என்பதற்கிணங்க மனசாட்சி இல்லாத, தீய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்ததன் பயனை  தமிழகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும்.  அதன் பின்னர் பாட்டாளிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை  நாளாகிய மே தினத்தில் தமிழகத்தில் அல்லல்படும் ஆலைத் தொழிலாளர்களும்,  விவசாயத் தொழிலாளர்களும் இடர்களில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழும்  நிலை மலரட்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): நாடு தழுவிய  அளவிலும், தமிழகத்திலும் மாற்றுக் கொள்கையை முன்வைத்து மகத்தான மக்கள்  போராட்டங்களை நடத்திட இந்த மே தினத்தில் உறுதியேற்போம்.

இரா.முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):  உழைக்கும் மக்களின் ஒற்றுமைதான்  இன்றைய சவால்களை சந்திக்க மிகப் பொருத்தமான ஆயுதமாக அமையும். அத்தகைய  ஒற்றுமைக்காக சபதமேற்போம்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தொழிலாளர் நலன் காப்போம். அவர்கள் வாழ்வில் உயர வழி காண்போம்.  இதனையே இந்த நாளின் சபதமாக நாம் ஏற்போம்.

திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள் தலைவர்): உலகம் தழுவிய அளவில் முதலாளித்துவ சுரண்டல் கொடுமைகளிலிருந்து தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளை மீட்கவும் காக்கவும் வேண்டியது ஒவ்வொரு புரட்சிகர-சனநாயக சக்தியின் கடமையாகும்.

இதே போல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொமதேக பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவர் சேம.நாராயணன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் ஏ.நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோரும் மே தினவாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Recent Post