Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

நெல்லிக்காய் – பயன்கள்



உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய், நார்த்தங்காய், தேசிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக் கூடிய உணவு வகைகளாகும்.


நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைக்காலம் முழுவதும் தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய், இருவகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாகச் சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும்.

அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தைக் குறைத்து மூளைக்குக் குளிர்ச்சியும் ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை எந்த விதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

சிறுவயதில் நெல்லிக்காய் பறிக்கத் தோப்புக்குச் செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் தின்பண்டக் கடைகளில் கமர்கட், கச்சான், பஞ்சுமிட்டாய், மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், முந்திரிப்பழம் மற்றும் அரி நெல்லிக்காய், பொறி கடலை ஆகியவற்றை இளம் சிறார்கள் ஆவலுடன் வாங்கி உண்டு மகிழ்வது நமது நாட்டில் வாடிக்கை தானே! அதுவும் நெல்லிக்காய் சீசனில், நம் வீட்டுப் பெண்மணிகள் இவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஊறுகாய், சட்னி, பச்சடி போன்றவற்றையும் வடகம் தயாரிப்பதும் வழக்கம் தானே !

நெல்லிக்காய் எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவக் குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். கணைச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்காயைச் சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு. இரத்த உறைவால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாகப் பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படிப் பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தித் தலையில் தேய்த்துக் குளிக்கவும் நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்த விதத் தொல்லையுமின்றி குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.

இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம் கொண்டவை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும், அவற்றின் பயன்களையும் முக்கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவப் பயன்களையும் எளிதாய்ப் புரிந்து அறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குறிக்கோளை அடைவதற்கே. அதிலும் நமக்குத் தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கின்ற உணவுப் பொருட்களைப் பற்றியே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ முறைகளால் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை அளித்தும் ஆலோசனைகள் வழங்கியும் சேவை புரிவதின் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

டாக்டர் ரொசாறியோ ஜோர்ஜ்

1 comment:

Recent Post